ஆ.இரவிகார்த்திகேயன் எழுதிய. புதிய“தாய்” ….
செந்நீர் சுடரிய ஊழியம் பணியொடு தண்பெயர் தலைஇய ஊழியம்
(பரிபாடல் - 2)
கதிரவனிடமிருந்து தெறித்து விழுந்த உலகம் நெருப்பாக இருந்து பின் குளிர்ந்து பனிப்படலமாக ஆகிப் பின்னர் பனிஉருகி நிலப்பகுதியாகியது என்னும் நிலவுலக வரலாற்றைப் பண்டையத் தமிழப்பாடல் அறிவியல் பார்வையுடன் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமுன் எடுத்துக்கூறியது வியப்பளிக்கின்றது. வானோங்கிய மலைகள், அச்சமூட்டும் பள்ளங்கள், சீறிப்பாயும் நதிகள், ஆர்ப்பரிக்கும் கடல்கள், உறைய வைக்கும் பனி, விண்ணிலிருந்து தவழும் மழை, வியப்பூட்டும் வானம், சில்லென்று வீசும் காற்று, உணர்த்திடும் வெயில, பரவசமூட்டும் பசுமை என அற்பதங்கள் நிறைந்தது பூமி. இதில் எண்ணிலடங்கா உயிரினங்களையும,; அறிவார்ந்த மனித குலத்தையும் தன்னகத்தே கொண்டு சுழண்டு வருகின்றது.
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்குமுன் பூமியின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என புவியியலார் கணித்துள்ளனர்.
புவியின் வரலாறு என்பது அதன் புவியியல் மாற்றத்தையும,; தொல்லுயிர்த்; தோற்றத்தையும், அவற்றின் பரிமாணத் தோற்றத்தையும,; மனிதச் சமூகம் கண்ட விளைவுகளையும் எடுத்துக் கூறுவதாகும். நாம் வாழும் மண்ணையும் நம் முன்னோர்கள் கடந்து வந்த புதிரான சமூகக் காலக்கட்டங்களையும் அறியும் வகையில் சிறிய முயற்சியாக நாம் வாழும் தமிழகப் பகுதியின் மாந்தரின வரலாற்றுச் செய்திகளின் ஊடே தமிழ்ச்சமூக உருவாக்கத்தினைக் காண்போம்.
தொல்லுயிர் காலம்
பூமியில் சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பாசி, பாக்டீரியா போன்ற தொல்லுயிர் எச்சங்கள் காலத்தை கேம்பிரியன் ( ) சகாப்தம் என தொல்லுயிரியலார் அடையாளம் கூறுவர். தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மலைத்தொடர், பழனி, கொடைக்கானல் மலைத்தொடர், சேர்வராயன், கல்வராயன், சவ்வாது மலைகளும், செஞ்சி, திருவண்ணாமலை பாறைக்குன்றுகளும் இவ்வகையைச் சார்ந்தது. ஆதலால் இப்பாறைகளைக் கேம்பிரியன் சகாப்தத்திற்கு முற்பட்ட சகாப்தம் என தொல்லுயிரியலார் கணித்துள்ளனர்.
தமிழகத்தின் சோழமண்டல கடற்கரையிலிருந்து திருச்சி, அரியலூர், பண்ருட்டி மற்றும் கடலூர் வரை நிலம் சுமார் 13½ கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இங்கு கடல்வாழ் உயிரினங்களான சிப்பிகள், நத்தைகள், பவளப்பாறைகள், இராட்சத சங்குகள் பதினேழுவகை மீன்கள் கடலில் வாழ்ந்த இந்தியஸோர் என்ற நான்கு டைனசர் எச்சங்கள் போன்றவையும் கூழாங்கற்களும் கிடைத்துள்ளன. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மரங்கள் கடல்கோளினால் பூமியில் புதையுண்டு கல்மரங்களாக சாத்தனூர், வரகூர், ஆணைப்பாடி சாரதாமங்களம், ஆளுத்தளிப்பூர், திருப்பூர் அருகே மங்களம், விழுப்புரம் அருகே திருவக்கரை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கைக்கு அருகில் உள்ள தொரணியில் களிமண் படிவங்களில் தாவரங்களின் இலை தழைகளின் கரிமம் பதிவுகளாக் புவியியல் சான்று பகர்கின்றன.
கோண்டுவானா கண்டம்
உலகில் பூமத்திய ரேகையின் தெற்குப்பகுதியிலுள்ள கண்டங்களிலிருந்து படிவங்கள், பாறைகள் இவற்றின் தொல்லுயிர் எச்சங்களின் ஒற்றுமைகள் ஆகியன இவை ஒரு காலத்தில் பிளவுபடாத ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என சான்று கூறுகின்றன.
தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் துருவம் அனைத்தும் ஓரே கண்டமாக இணைந்திருந்த தென்றும் பனியுக படிவங்களில் உள்ள தொல்லெச்ச அடையாளங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் தொல்லுயிரியலார்.
கண்டங்களின் இடப்பெயர்ச்சியினால் தென்துருவத்துடன் இணைந்திருந்த இந்திய நிலப்பகுதி பகுதிகள் பூமத்திய ரேகையின் வடக்கு நோக்கி வந்துள்ளதாக எடுத்துரைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பனியாறுகள் இருந்ததற்கான தடயங்கள் இயற்கையினால் அழிந்து விட்டன. கண்டங்களின் இடப்பெயர்ச்சியினால் இந்திய நிலப்பகுதி பூமத்திய ரேகையின் வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல பரவலான வெம்மையினால் தென்னந்தியப் பாறை பரப்புகள் மக்கி மண்ணாயின என்றும் பனியுலக காலத்திற்கு ஒரிஸ்ஸாவில் உள்ள (டால்ச்சின்) படிவங்கள் பனியுக சான்று தருகின்றன எனவும் கூறுகின்றனர்.
தொல்படிவங்கள்
சுமார் 20-30 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட படிவங்கள் காரைக்காலிலும் கடலூரிலும் காணப்படுகிறது. இதில் ஆறு ஏரிகளில் வாழ்ந்த சங்கு சிப்பிகளின் படிவங்கள் கிடைக்கின்றன. கடலூர் மணல்கல் படிவத்திலிருந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி கிடைக்கி;றது. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் சுண்ணாம்புக்கல,; ஓடைக்கல் மணல்படிவங்களில் ஆதியானை இனத்தின் மண்டையோடு, காண்டாமிருகத்தின் மண்டையோடு போன்ற தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
மாந்தரினம்
குரங்கினத்திலிருந்து பிரிந்த விலங்கினமாக வாழ்ந்த மனிதகுலத்தின் முன்னோடி விலங்கினம் சுமார் 3 கோடி வருடங்களில் பல பரிணாம வளர்ச்சியைக் கண்டது. இந்திய நிலப்பரப்பில் மனிதகுலத்தின் முன்னோடிப்பட்டியல் ஆய்வில் சிவாலிக் குன்றுகளில் கிடைத்த படிவங்களில் கண்டெடுக்கப்பட்ட சிவாபிதாகஸ், இராமபிதாகஸ் எனப் பெயிரிடப்பட்ட விலங்கினங்களின் தாடை எலும்புகள் மனித இனத்திற்கு நெருக்கமானதல்ல; அவை ஓரங்உடான் என்ற குரங்கினத்தைச் சேர்ந்தது என்றும் இவற்றின் கால் மற்றும் இடுப்பு எலும்புகள் கிடைக்காத நிலையில் திட்டவட்டமாக கூற முடியவில்லை என்றும் மானிடவியலார் கருதினர். நர்மதையின் நதியோர ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகள், தாடை எலும்புகள், உபயோகித்த கல் ஆயுதங்கள் போன்றவை மனிதகுலத்தின் முன்னோடியான ஹோமோஎரக்டக்ஸ்க்கு ஒத்திருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த இனம் வாழ்ந்த காலம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் ஆண்டுகள் என வரையறை செய்யப்பட்டுள்ளது. பழைய கற்காலம் என ஆய்வாளர்களால் குறிப்பிடும் இக்காலத்தில் நெருப்பின் பயனையும், கல் ஆயுதங்களையும் அறிந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
ஹோமோசேப்பியன் என்ற மூலத்திலிருந்து தோன்றிய தற்கால மனிதகுலம் ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்டது என மானி;டவியலார் எடுத்துரைக்கின்றனர். தாம் தோன்றிய ஒரு லட்சம் ஆண்டுகளுக்குப்பின் அது உலகின் பிற பகுதிகளுக்குப் பரவியதாக சான்றுகள் கூறுகின்றன.
உயர்நிலை பாலூட்டி விலங்கினமாக உருவான மனிதஇனம், தொடக்கக் காலத்தில் இனப்பெருக்கம், பால் உயிரணுக்களின் முதிர்ச்சி, கருவுறுதல,; உறுப்புயிர் உருவாதல் அதன் பாரம்பரியத்தில் மாறுதல் போன்ற உயிரியல் பண்புகளைப் பெற்றிருந்தது.
உழைப்பின் மூலம் விலங்குகளின் உலகத்திலிருந்து வெளியேறி மனிதகுலம் தன்னை உயர்த்திக் கொண்டது.
மானுட வரலாறு
வரலாற்று நெடிய தமது பயணத்தில் இயற்கையோடு மாந்தரினம் நடத்திய போராட்டங்கள,; பசி, தொற்று நோய்கள,; விலங்குகளின் தாக்குதல்கள், உயிர்பலி கொண்ட (எரிமலைவெடிப்பு சூறாவளி, கடல்கோள்) போன்ற சிக்கலான புலப்பாடுகளுக்கிடையிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.
உலகின் பல்வேறு பகுதிகளில் பண்டைக்கால மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பது பற்றி அரும்பாடுபட்டு சான்றுகள் சேகரித்த பற்பல நிபுணர்கள், தொலைவான பழங்காலத்தில் உருவாகிவந்த வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளின் பொதுவான உருவரைகளை நாம் தடம் காணுவதற்குப் போதுமான தகவல்கள் சேகரித்திருக்கிறார்கள்.
பண்டைய உணவுப் பழக்க வழக்கங்கள,; குடியிருப்புகள், இறந்தோரைப் புதைத்த இடங்கள் மற்றும் பழங்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள,; பாத்திரங்கள், ஆபரணங்கள் மற்றும் அவர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது நமது மூதாதையர் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை பற்றியும் நமக்கு சித்திரத்தை தருகின்றது.
இந்தியப் பழங்குடியினர்
இந்தியப் பெருநிலப்பரப்பில் மனிதச் சமூக வரலாறு என்பது ஆய்வுகளில் கிடைத்தைவிட புராண இதிகாசங்களில் தகவல்கள் விரவிக்கிடப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஆரியர்களின் ஆதிக்கால மக்களின் பூர்வீக வரலாறு சம்மந்தமாக எழுத்தில் இருப்பது மாதிரி வேறு எந்த புராண மக்களுக்கும் கிடையாது என்கிறார் அறிஞர் எஸ்.ஏ.டாங்கே.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்குமுன் வேறு மக்கள் இங்கு வசித்தார்களா? அவர்களுடன் ஆரியர்கள் போராடினார்களா? தோற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு தஸ்யுக்களிடமிருந்து வெற்றிபெற வேண்டும் என்று ரிக்வேதப் பாடல்களில் ஆரியர்களின் குரலைக் கேட்க முடிகிறது. தஸ்யுக்கள் எனப்படுவர் திராவிடர்கள் என ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
திராவிடருக்கு முற்பட்டோர் இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் சான்று கிடைக்கிறது. மான் - கெமர் எனக்கூறப்படும் பழங்குடி மக்கள் (இவர்களின் வழித்தோன்றல்களாக முண்டாக்கள,; நாகர்கள், சான்தாஸ்கள்) பாலினீஸ்யர்கள் குடும்பத்தினர் என மானிடவியலார் வரையறை செய்யும் இவர்கள் மலேயா, இந்தோசீனம,; இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவரை பரவியுள்ளனர். திராவிடர்களால் இவர்கள் துரத்துப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்தியப் பழங்குடி மக்களினத்தில் பெரும்பாலும் குட்டையாகவும், கருத்த நிறத்துடன் (நீக்ராஸ்ட்) ஆப்ரிக்க இனத்தவர்களின் அம்சங்களோடு வாழ்பவர்கள் இருக்கின்றனர். இவர்கள் இந்தியா முழுவதும் பரவிய முதல் மூத்தக்குடியினர் எனக் கருதப்படுகின்றனர். தமிழகத்தில் வாழும் இருளர், காடர், முதுவர், சோளிகர், ஆகியோர் மலைக்காடுகளில் பழங்குடி சமூக வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.
திராவிடர்கள்
கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து அலை அலையாக வந்த மனிதக்கூட்டம் காராகோரம் கணவாய் வழியாக சிந்து கங்கை சமவெளியில் பரவி பின்னர் விந்தியமலையிலும் தென்னந்தியாவிலும் குடியேறினார்கள். வடஇந்தியாவில் மக்கள் குடியேற்றங்களுக்குமுன் தென்இந்தியாவில் மக்கள் குடியேற்றம் நிழ்ந்துள்ளதாகவும் குடியேறிய பகுதி திராவிடம் எனவும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐரோப்பிய வகை – நீக்ரோ வகை – ஆஸ்திரேலிய வகை பெரிய இனங்களின் பரிணமிப்புத் தன்மை கொண்ட மானிட மாதிரியாய் மானிடவியலார் திராவிடர்கள் என எடுத்துகள் கூறுகின்றனர்.
சில வரலாற்று ஆய்வாளர்கள் மாந்தரினம் தக்காண காடுகளில் உருவாகி இந்தியக் கடலோரம் பரவி உலகின் பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக வாதிடுகின்றனர்.
மொழியியலார் சிலர் குமரிக்கண்டமே மாந்தரினம் முதலில் தோன்றிய பகுதி; கடல்கோளினால் அது அழிவிலிருந்த தப்பிய சமூகமே உலகம் முழுவதும் பரவியது; மூத்தகுடியின் தொல்எச்சங்களாக மொழியியல் கூறுகளின் ஒற்றுமை பண்டைய சமூகத்தில் நமக்கு கிடைக்கின்றது என எடுத்துரைக்கின்றனர்.
இதனை மறுக்கும் முகமாக தற்போதைய விஞ்ஞான உலகம் மாந்தரினத்தின் தொல்எச்சங்களை ஆப்பிரிக்காவில் தொடங்கி தென்மேற்கு ஆசியாவில் வளர்ச்சி பெற்று உள்ளது. கி.மு.இருபதாயிரம் நூற்றாண்டு சான்றுகள் அங்கு கிடைக்கும் போது கி.மு. ஐந்தாயிரத்திலிருந்து கி.மு. பத்தாயிரம் வரை மாந்தரினத்தில் வாழ்ந்த தொல்சான்றுகள் மட்டுமே இந்தியாவில் கிடைத்துள்ளது எனப் பகர்கின்றனர். கண்டங்களின் இடப்பெயர்ச்சி பலகோடி ஆண்டுகளுக்குமுன் நடந்தது அப்பொழுது மாந்தரினம் மொழியறிவு பெற்றிருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர் மானிடவியலார்.
மொத்தத்தில் இந்தியாவில் மனிதச் சமூகத்தின் கற்கால வாழ்க்கை வரலாற்றில் பழங்குடி மக்களும் திராவிடர்களும் பூர்வகுடி மக்களாய் உள்ளதை சான்று அளிக்கின்றனர்.
தற்போதைய இந்திய நிலப்பரப்பில் பழங்குடிமக்கள் - திராவிட இன மக்கள் பரவியபோது வேறு மாந்தரினமும் இங்கு வசிக்கவில்லை. ஆதலால், இம்மக்களினத்தின் மொழியியல,; பண்பாடு மற்றும் உடல்கூறுகள் ஆப்பிரிக்க – மேற்காசிய பண்டைய மக்களினத்தின் சிறப்புக் கூறுகளோடு ஒப்புமைச்சான்று கிடைக்கின்றது.
இச்சான்றுகள் வழி தொடர்ச்சியான சமூக வரலாற்றை மானிடவியலாளர் கூறும் போது இவர்கள் மூத்தக் குடியினர் என அறிய முடிகின்றது.
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளில் பல்வேறு இனக்கலப்புகள், மொழி, கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் மாற்றமும் ஆதிக்கமும் இந்திய உபகண்டத்தில் நிகழ்ந்தும் தனித்துவமான மொழிகட்டமைப்பும் இலக்கிய, பண்பாடுப் பெருமைமிக்கவர்களாகத் திராவிடத்தில் வாழும் தமிழர்கள் உள்ளனர்.
மனிதகுலத்தின் தாய்
காட்டுமிராண்டிச் சமூக நிலையிலிருந்த பண்டைய மக்களினத்தின் வரலாற்றின் தரவுகளிலிருந்து நமது அடையாளத்தைத் தேடுவது சாலச் சிறந்ததாகும். உணவு தேடும் உயர்நிலை பாலூட்டி விலங்கினமாக வாழ்ந்த மாந்தரினம் தற்கால உடல் கூறுகளை கொண்ட இனமாக வாழத்தொடங்கியபோது ஆணைவிடப் பெண்ணே முன்னிலையில் இருந்தாள்.
பெண் மாந்தரினத்தில் மறு உற்பத்திற்கான உடல்கூறுகளைப் பெற்றவளாதலால் பிறப்பு உறுப்பு உருவாதல,; கருவுருதல,; பாலூட்டுதல் போன்ற சிறப்புகளால் தொல்காலத்தில் முதலிடம் விகித்து சமூகத்தில் தலைமையிடத்தைப் பெற்றாள்.
இரைதேடலும,; இனச்சேர்க்கையும் ஆணின் பணியைக்காட்டிலும் பெண் இயற்கையாக உடல்கூறு பண்புகளால் கருவுறுதல,; குழந்தைபேறு காலத்தின் உடல் வலியையும் பொருட்படுத்தாமல், குழந்தைக்குப் பாலூட்டுதல், உணவுதேடுதல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்தல் போன்ற பணிகள் அவளைத் தலைமைப் பண்பில் நடக்க வைத்தது.
பெண்ணின் மறுஉற்பத்திக்கான உடல் கூறுகளின் ஆற்றலும் பண்டைய சமூகத்தில் அவளை தெய்வநிலைக்கு உயர்த்தியது.
தாய்வழி(மொழி) குடும்பம்
பண்டையச் சமூகத்தில் பழங்களும், கொட்டைகளும் கிழங்குவகைகளும் மாந்தர்க்கு உணவாக இருந்துள்ளது. இது அவர்களது நீண்ட உணவுக்குழல், அவர்களது வழவழப்பான நாக்கு, தட்டையான பற்கள் ஆகியவற்றால் மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
தொல்காலத்தில் மனிதகுலம் உணவு சேரிப்பிலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலும் முக்கியப் பணியாக கொண்டு இருந்தது.
மரங்கள் தாவரங்களிலிருந்து இயற்கையாகக் கிடைத்த உணவுவகைகளை சார்ந்திருந்த பண்டைய மக்கள் பருவமாற்றங்கள் மாறும்போது இயற்கையில் கிடைக்கும் உற்பத்தித் திறன் பற்றாக்குறையினால் சேகரிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள பல்லாவரம், வடமதுரை, செங்கற்பட்டு அத்திராம்பாக்கம் கோர்த்தலையார் நதிப்படுகை போன்ற இடங்களில் பழைய மத்திய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கரடுமுரடான கைக்கோடாரி, கிழிப்பான் போன்றவை கிடைத்துள்ளன. இறைச்சியை வெட்டவும், எலும்புகளை பின்னப்படுத்தவும், கிழங்குகளைத் தோண்டவும் இந்த உடைந்த கூழாங்கல்லால் செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.
கைகளை மட்டுமே நம்பிய மக்கள் சிறுசிறு கற்களையும் கைத்தடிகளும் பயன்படுத்தினர். மலைக்குகைகளும் மரப்பொந்துகளும் இயற்கையாய்க் கிடைத்த வாழ்விடமாய் பயன்படுத்தத் தொடங்கிய போது இயற்கையின் சீற்றங்களும், கொடிய விலங்கின் பார்வையிலிருந்தும் தப்பிய உணர்வு கிடைத்தது. நாடோடிகளாக திரிந்த மனிதகுலம் அருகிலிருந்தவர்களின் ஆற்றல் உதவியினால் உணவு சேகரிப்பு பணியிலும்,
விலங்குகளின் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையிலும் வெற்றி கண்டது. அச்சூழ்நிலையில் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட சைகைகள், ஒலிகள், எழுப்பிய ஒசைகள் சொற்களாக உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வளர்ந்து அறிவு வழிப்பட்ட மொழி உருவாக்கத்தில் சமூகத்தின் பங்கு இருந்திருக்கும் என மானிடவியலாரும். மொழியியலாரும் கருதுகின்றனர்.
தமிழ்மொழியின் எல்லாச் சொற்களும் பொருள் உண்டு. தமிழ்ச்சொற்களுக்கான வேர்ச் சொல்லை தமிழில் மட்டுமே காண இயலுமே தவிர வேறு மொழியில் காண இயலாது.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்றவைகள் தான் முதலில் தோன்றிய மொழிக்கு பேச்சின் மூலங்கள் மாந்தரினம் வெளிபடுத்திய உணர்ச்சியொலிகளே தமிழ் மொழிக்கு மூலமாக அமைந்தது. இவ்வொலிகள் யாவும் இடுக்கண், இன்பம், அழைப்பு, நீக்கல், தூண்டல், துரத்தல், ஒட்டுதல், ஓட்டுதல் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் தோன்றியவையாகும்.
பண்டைய காலத்தில் தனிமனிதர்க்கு உரிய தற்காப்புத் திறன் போதாத சூழ்நிலை அவர்களை கூட்டாக வாழும் முறைக்குத் தள்ளியதால் ஒருவருக்கொருவர் உறவு மேம்படலாயிற்று. அதனடிப்படையில் சமூகத்தில் ஆண்கள் ஒரு குழுவாகவும், பெண்கள் ஒரு குழுவாகவும் வாழும் சூழ்நிலை உருவானது. இரு குழுக்களுக்கிடையில் சகோதர, சகோதரி உறவும், பாலுணர்வும் இருந்தது. (விலங்கினம் போல்) கணவன் மனைவி உறவும் காணப்பட்டது. பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலுணர்வுச் சேர்க்கையும் நிகழ்ந்தது. இதனை ஒரே இனவகை இரத்த உறவுக் குடும்பம் எனச் சமூகவியலார் எடுத்துரைப்பர்.
மாந்தரினம் கூட்டாக வாழக் கற்றுக்கொண்ட பிறகு ஒரே பகுதியில் உணவுகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இரத்த உறவு உள்ள குடும்பம் விரிவுப்படுத்தவேண்டிய நிர்பந்தம் உருவானது. விரிவுப்படுத்தப்பட்ட குழுவினர் தாம் பெரிதும் சார்ந்திருந்த உணவுப்பொருள் தாவரத்திலோ, இயற்கைப்பொருள்களையோ அல்லது விலங்குகளையோ குலச்சின்னமாக அடையாளம் கொண்டனர்.
ரத்த உறவு உள்ள இக்குலங்கள் பின்நாளில் குலக்குறியின் அடிப்படையில் இணைந்தோ அல்லது புணர்ச்சித் தடையோ கொண்டு வாழ முற்பட்டனர்.
இச்சமூகச் சூழ்நிலை பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் உடலுறவு விலக்கப்பட்டு ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரர், சகோதரிக்கிடையில் உடலுறவு கொள்வதையும் தடை செய்தது. இம் முன்னேற்றத்தின் விளைவாக பழைய சமூகங்களிலிருந்து புதிய குடும்பச் சமூகங்கள் எழுந்தன.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரிக்கிடையில் ஒரு குழுவும், சகோதரர்க்கிடையில் ஒரு குழுவும் குடும்பச் சமூகத்திற்கு மூலக்கருவாக அமைந்தது. சகோதரன் வழியிலும், சகோதரி வழியிலும் புதியதாய் வழி வந்த உறுப்பினர்கள் கிடைத்தனர். இதனைக் குலம் என்று கூறுவர். இக்காலக்கட்டத்தில் எல்லோர்க்கும் பொதுவான தாய் வழியில் சமூகம் அடையாளம் காணப்பட்டது.
கூட்டுக்குடும்ப அமைப்பாகத் திகழ்ந்த அக்குலத்தில் தாய், குடும்பத்தில் உள்ள குழந்தைகள் எல்லோரையும் தன் குழந்தை என்றாள்.
மனித சமூகத்திற்கு மறு உற்பத்திக்கான உடல்சார் ஆற்றல் கொண்ட பெண்ணாவள் சமூகத்தின் தலைமையிடத்தில் தாய் எனப் போற்றப்பட்டாள்.
அவள் தன் குழந்தைகளை மட்டும் மகன், மகள் என்று அழைக்கவில்லை; தன் சகோதரியின் குழந்தைகளையும் தன் குழந்தைகளோடு சேர்த்து தன் மகன், தன் மகள் என்றாள். இவர்களுடைய குழந்தைகள் தங்களுக்கிடையில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அழைத்துக் கொண்டார்கள் சகோதரர்களின் குழந்தைகளும் தங்களுக்குள் இவ்வாறே அழைத்துக் கொண்டார்கள். ஒரு பெண்ணின் குழந்தையும், அவளுடைய சகோதரனின் குழந்தையும் ஒருவருக்கொருவர் சேய் என்றும் அழைக்கின்றார்கள். இவை வெறும் சொற்கள் அல்ல. இரத்த உறவுமுறையின் நெருங்கிய தன்மையும், விலகிய தன்மையையும், சமத்துவம், சமத்துவமின்மை பற்றி நடைமுறை அமுலில் இருக்கின்ற கருத்துக்களையும் குறிக்கின்ற சொல்லாகும். ஒரு தனிநபருக்கு நூற்றுக்கணக்கில் வேறுபட்ட உறவுகளைத் தமிழ்ச் சமூகத்தில் கூற முடியும். மாந்தரினம் ஒரு தலைமுறை பெற்ற தகவலை அடுத்தத் தலைமுறைக்கு மொழியின் துணைகொண்டு ஊட்டியது.
வளமையான தெய்வம்
தாய்வழிச் சமூகத்தின் சான்றுகளைப் பெற்றுள்ள தமிழர்கள,; மனித இனப் பெருக்கத்தின் இயற்கையான பேராற்றல் கொண்ட பெண்ணை (தாய்) தெய்வமாகக் கருதினர்.
பழந்தமிழ் இலக்கியங்கள் குறி;ப்பிடும் மோடி, பழையோள், முதுகோதை, ஆத்தாள், ஆயா, அம்மா என்ற தெய்வங்கள் மனித இன உற்பத்தியின் அடையாளம் என்பதில் அய்யமில்லை.
மோடு என்பதற்கு வயிறு என்று பொருள், எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய் தெய்வம் மோடி என அழைக்கப்பட்டாள்.
ஆதிகால தமிழர்கள் சுட்ட மண்ணில் உருவாக்கிய தாய் தெய்வம் பெரிய வயிறும் பெரிய மார்பகங்களும் கொண்ட சுடுமண், சிற்பங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. மேலும் கி.மு.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சியில் கிடைத்த ஓட்டில் ஒரு பெண் அப்பெண்ணை சுற்றிலும் நெற்கதிர், மான், கொக்கு வாயில் மீன், ஆமை, பன்றி போன்ற புடைப்புச் சிற்பங்கள் போன்றவை காட்டப்பட்டுள்ளன. இது நாகரிகப் பண்பாட்டின் வளமைக்குச் சான்றாகும். தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகத்தாலான தாய்த்தெய்வச்சிலை ஆதிச்சநல்லூரில் கிடைத்தாகும். தற்போது தமிழர்களின் முக்கிய வழிபாட்டுக்குரிய தெய்வமாக விளங்கும் பெண் தெய்வமான மாரியம்மன் கோவில்களில் மகமாயி (மகா + ஆயி) என்ற சொற்களால் வர்ணிக்கப்படும். பெரிய மார்பகமும், பெரியவயிறும், பெரியபுட்டமும் கொண்ட பிரமாண்டமான தாயத்தெய்வம் வீற்றிருப்பது பெண்ணின் இன விருத்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வடிவத்தின் தொடர்ச்சியே ஆகும்.
பழந்தமிழர்கள் வள்ளிக்கிழங்கை முக்கிய உணவாக உட்கொண்டனர். தமிழர்களின் தேவையான உணவு வளத்திற்கு அடையாளமாக வள்ளிக்கொடி விளைதல் இருந்தது. வள்ளிக்கொடி விளைதலை செழிப்பின் அடையாளமாக எண்ணினார். வளமை என்ற சொல் வாழ்வுக்கு ஆதாரமாகத் தாவரத்தை குறித்ததில் உருவானதாகும். சமூகத்தை வாழ வைப்பது, செழிப்பைத் தருவது என்ற பொருளில் வள்ளி என்ற சொல் விளங்கியது.
வள்ளல், வள்ளியம் போன்ற சொற்கள் கொடை என்ற பொருளில் பழந்தமிழ் நூல்களில் செழிப்புத் தன்மையினால் வந்த பயனைக் குறிக்கின்றது.
மனிதச் சமூகத்திற்கு இயற்கையான உணவு உற்பத்தியைக் கண்ட தமிழர் வள்ளிக்கிழங்கை தெய்வமாகக் கருதினர். உணவுத் தேவையை எந்த பருவகாலத்திலும் ஈடுசெய்யும் உணவுத் தாவரமான வள்ளியின் ஆற்றல் பெண் தலைமையிடத்துத் சமூக பின்னணியில் தாய்த்தெய்வமாக கருதச் செய்தது.
பாரியினுடைய பறம்பு மலையில் உழவர்கள் உழுது பயிரிடாமல் பெறும் நான்கு விளைபொருள்களில் வள்ளிக் கிழங்கு ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைவாழ்நர் தவறு புரிந்தால் அவர்களது குடியில் வள்ளிக்கிழங்கு கீழ் விழாது, மலையில் தேன் கட்டு கட்டாது என நம்பி வந்ததைக் கலித்தொகை (39) பாடல் தெரிவிக்கின்றது.
தற்போது தமிழக மக்களின் குல தெய்வ வழிபாட்டில் முக்கிய தெய்வமாக விளங்கும் பச்சையம்மன் என்ற தாய்த்தெய்வம் வளமையின் குறியீடாகப் போற்றப்படுகின்றது. இக்கோவில்களில் வள்ளித்தெய்வம் உடன் இருப்பதைக் காணலாம். முருகனோடு பின்னாளில் மனைவியாக இணைக்கப்பட்ட வள்ளி, புராணக்கதையில் வள்ளிக்கிழங்கு தோண்டிய குழுவில் அவள் கண்டெடுக்கப்பட்டவளாகக் குறிப்பிடப்படுகிறாள். வழிபாட்டில் பச்சைநிறம் உடையலங்காரம் அவளுக்குச் செய்யப்படுகின்றது. குறிஞ்சி நில மக்களின் தொழிலாகக் குறிப்பிடும் திணைச்சமூக வாழ்க்கையில் கிழங்கு கில்லியெடுத்தல், தேனெடுத்தல் போன்றவைகளில் ஈடுபடும் குறவர் இனச் சமூகத்தின் மகளாக அவள் சித்தரிக்கப்படுவதும் அவளை மான் ஈன்றெடுத்ததாகக் கூறப்படும் தொன்மம் பாய்கலை பாவை என்ற தாய்த்தெய்வ மரபோடு வள்ளி உருவாக்கத்தினைக் குறிப்பதாகும்.
பெண்ணின் வேட்டைச்சமூகம்
பழைய கற்காலச் சமூகம் எனும் அநாகரிக சமூகத்தின் ஊடே புதிய கற்காலம் எனும் நாகரிக உலகத்தில் நுழைந்த மனிதச்சமூகம் புதிய கற்கருவிகளைக் கையாண்டு பழகியிருந்தது. உணவு சேகரிப்பு நிலையிலிருந்து நீர்வாழ் உயிரினங்களையும் காடுகளின் விளிம்புகளில் வேட்டையாடியும் வாழ்ந்தவர்கள் கானகத்தில் நுழைந்தனர்.
நீர்நிலைகளுடன் காடுகள் இயற்கையான உணவினையும், இறைச்சியையும், மீனையும் தந்தால் உணவு வேட்டையில் சமூகம் மாறியது. கொடிய விலங்குகளை எதிர்கொள்ளும் வாழ்கை வீரமும், வேகமும் கொண்ட பண்புகளை வளர்த்தது. பருவ மழை பொய்த்த போது இயற்கை உணவுகள் கிடைக்காமல் இறைச்சி உணவை முழுவதும் சார்ந்த நிலை மனிதச்சமூகத்திற்கு ஏற்பட்டது ஆடு, மாடு, எருது, மான் போன்ற விலங்குகள் நீர்நிலை, பசுமையை தேடி வரும்போது வேட்டையாடுவது எளிதாகவும் இருந்தது.
பழஞ்சமூகம் காடு தன்வளத்தால் மனிதகுலத் தேவைகளை இயற்கையாக நிறைவு செய்வதை உணர்ந்து காட்டைத் தெய்வமாக உணர்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள் காடுகாள், கானமர்செல்வி, காடுகிழாள், காடமர்செல்வி என இத்தெய்வங்களை தாயத்தெய்வமாக பதிவு செய்கின்றது.
வேட்டைத் தொழிலுக்கான வேகமும் ஆற்றலும் பெற்றிருந்த பெண்ணின் பண்புகள், தாயத்; தெய்வத்திற்கும் வழங்கப்பட்டது. ஆதலால் வேட்டையில் வெற்றி தருபவளாக கொற்றவை என்ற தாய்த்தெய்வம் கூறப்பட்டது.
பண்டையச் சமூகத்தில் மான் உணவிற்கு வேட்டையாடப்பட்டது. மானின் எலும்புகள் மாந்தர் வாழ்விடங்களில் களஆய்வில் மிகுந்து உலகெங்கும் கிடைப்பதாக ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நீரிடங்களின் அருகே அமைந்துள்ள கொற்றவையின் சிற்பங்களில் மான் இடம் பெற்றிருப்பதும், பழந்தமிழ் இலக்கியங்கள் இவளை “பாய்கலைப் பாவை” என வர்ணிப்பதும் சமூகச் சித்திரத்தை அறிய முடிகிறது, பாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.
நீரிடங்களின் அருகே வாழ்விடங்களை அமைத்துக்கொண்;டு நீர்அருந்த வரும் விலங்கினங்களை வேட்டையாடும் ஆற்றல் நிறைந்த தாய்வழிச் சமூக மரபின் இயற்கையின் ஆற்றலோடு இணைத்துக் கூறப்படும் தொன்மங்கள் நிறைந்த ஏழு கன்னிமார் எனும் (சகோதரிகள் கொண்ட குழு ) தாய்த்தெய்வ வழிபாட்டின் மூலம் சான்றுகள் அறிய முடிகின்றது.
செல்வம் என்றாலே செழிப்பு என்ற பொருள் தோன்றுகின்றது. காடுகள் என்பது பெண்ணின் இனவிருத்தி ஆற்றலோடு கூறப்பட்டது. காட்டில் உறைபவளாக சித்தரித்து பெண்ணின் இளம்பருவ வனப்பை குறிக்கும் சொல்லால் காடமர் செல்வி என பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர்.
வேட்டைச் சமூகத்தில் பெண்ணோடு ஆண் இணைதல்
கூட்டுச் சமூக வாழ்வு இறுக்கமாக ஆண் பெண் இருபாலரும் வேட்டைத் தொழிலில் ஈடுபடலாயினர். வேட்டைச் சமூக வாழ்க்கையும் புதிய கற்காலக் கருவிகளின்; பயன்பாடும் ஆணின் பங்கை சமூகத்திற்கு வழங்கியது. ஆயுதமேந்திய ஆணின் சமூக நடவடிக்கைகள் வேட்டைச் சமூகத்தில் பெண் வகித்த தலைமையிடத்தில் மெல்ல இடம் பிடிக்கின்றனர்.
பின்னாளில் ஆணின் வீரமும்இ தியாகமும் வேட்டைச் சமூகத்தில் முன் நிறுத்தப்படுகின்றது. ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த (புறம் - 242) படையமைத் தெழுந்த பெரும் சேய் ஆடவர் (அகம்) என்ற பழந்தமிழ் பாடல் வரிகள் ஆடு என்னும் சொல் வெற்றி என்ற பொருளை உரைக்கின்றது. ஆடவர் என்பது வீரர் என்று பொருள்படவே பயனுக்கு வருகின்றது.
அழகு என்பது ஆடவர்க்கு வீரம் என உணர்த்தப்பட்டது. இதன் பொருளால் இனக்குழு தலைவன் முருகு என அழைக்கப்பட்டான். வேட்டைச் சமூகத்தில் பெண் பெற்ற தலைமைப் பண்புகளோடு இணைக்கப்பட்டு நுகர்வுக்குரியவனாகக் கூறப்பட்டான். இதனையொட்டியே பழந்தமிழர் இலக்கியங்கள் “முருகு”வைப் பற்றி கூறுகின்றன. தாய் வழிச்சமூகத்தின் சான்றாக நற்றிணை விளக்;குகின்றது.
“முருகு புணர்த்தியன்ற வள்ளி போல்”
காட்டில் உறையும் தாய்த்தெய்வமான காடுகளின் மகன் மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாகக் கொண்டதாக நற்றிணை (82) பாடல் தெரிவிக்கின்றது.
தாய்த்தெய்வத்தின் மகன் மற்றொரு தாய்த்தெய்வத்தோடு கணவனாக இணைக்கப்படுகி;றான். தந்தையைப்பற்றி குறிப்பு அப்பாடலில் இல்லை. தாய்வழி உறவு முறையும், தாய் சமூக நாகரிகத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது. சமூகத்தில் ஆண் பெற்ற சமூக உயர்வை இலக்கியங்கள் முருகு எனும் இளஞ்சிறுவனை சுட்டிக்காட்டுவதன் மூலம் அறியமுடிகிறது.
குறிஞ்சி
மலை மற்றும் காடு சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களை கானவர், புலையர், குறவர் என பழந்தமிழ் இலக்கியங்கள் அடையாளம் இருக்கின்றன.
பண்டையகுலம் தான் துப்பிய பழங்கொட்டை, சிதறிய விதைகள், ஈரமண்ணில் விழுந்து செடியாகவோ, மரமாகவோ, கொடியாகவோ, துளிர்ந்து, வளர்ந்து, காய்களை, பழங்களை கொடுக்க இதனை விளைவிக்க முடியும் என உணர்ந்து கொண்டது.
நாடோடி வாழ்க்கையிலிருந்த தங்களை ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்டது. குழந்தைகளை ஊண் உண்ணிகள் ஊறு விளைவிக்காமல் இருக்கவும். நீர் அருந்தவும், விலங்குகளை இனம் கண்டு வேட்டையாடவும், நீரிடங்களின் அருகாமையில் உள்ள மலைக்குகைகளிலும், பாறையின் இடுக்குகளிலும் வாழ்விடங்களை தேர்ந்தெடுத்தனர். பின்னர் குகையின் முகப்புகளில் தங்களின் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.
கலாச்சார ஆற்றல்
உணவு சேகரித்தும், வேட்டையாடியும் நாடோடி வாழ்க்கையில் திரிந்த சமூகம் ஒரே இடத்தில் தங்கி வசிக்க முற்பட்டது. மானிடம் கலாச்சார தளத்தில் கால் வைத்து நுழைந்தாலும் வேட்டைச் சமூகத்தில் வெளிப்படுத்திய ஆற்றலை, அவன் ரசித்த காட்சிகளை தமது கூட்டத்தினரிடம் விவரித்தனர்; அதை நடித்தும் காட்டினர்; விலங்குகளின் இரத்தத்திலிருந்து அக்காட்சிகளை ஓவியமாக சித்தரித்தனர்; பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் மழையிலும், வெயிலிலும் மறைந்து விடாமல் அமைத்து கொண்டனர்; தாம் கண்ட விலங்குகளையும் மயக்க நிலையில் தாம் கொண்ட உருவங்களையும் இடம் பெறச் செய்தனர்.
கி.மு. 2000 முதல் கி.மு.500 வரையிலான ஆண்டுகளுக்குட்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற ஓவியங்கள் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, கொல்லூர், செத்தவரை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லப்பாடி, மகாராஐக்கடை, மல்லசமுத்திரம் கோயமுத்தூர் மாவட்டத்தில் குமிட்டிப்பதி, வெள்ளைருக்கம,; சிறுமலை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொணவக்கரை, மோயார், சீகூர், வேலூர் மாவட்டத்தில் சென்னராயன,; பள்ளிப்பாறை, சந்திராபுரம,; கலியாணகுகை போன்ற இடங்களில் குகை ஓவியங்களைத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆற்றல் மிகுந்த விலங்குகள் செந்நிறத்திலும் வேட்டையாடும் காட்சிகள் வெள்ளை நிறத்திலும் மாடு, ஆடு, மான், குதிரை, பாம்பு, மீன் மற்றும் சில பறவைகளோடு குறியீடுகளும் வேட்டைக்காட்சிகளும் படகுக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கருப்பு வெள்ளை நிறங்கள் களிமண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடிய கானக்குறவர்கள் மலைச்சாரலில் மரங்களையும் புதர்களையும் நெருப்பு மூட்டி விளைநிலம் ஆக்கியதை தமிழிலக்கியம் (அகம் - 140) பதிவு செய்துள்ளது.
“வெப்புள் விளைந்த வேங்கை செஞ்சுவற்
கார்ப்பெயர் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூமி மயங்கல் பல உழுது வித்து” (புறம் - 120)
என்ற பாட்டில் மழை பெய்த நிலத்தில் அதன் ஈரம் உலரும் முன்னரே உழுது விட வேண்டும் என எண்ணுபவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தன் சொந்த மூலங்களிலிருந்து தென்னந்தியாவின் நான்கு உலோகங்களுக்கும் பெயரை கண்டுபிடித்து.
இரும்பு (முந்தைய வடிவம் இருமு) இர் என்ற வேர் சொல்லிலிருந்து இருட்டு, இருள,; இரவு செம்சிவப்பு,
வெள்ளி – வெல்ளை, வெள் என்பதிலிருந்து..
பொன் - பொல் - ஒளிவிடு பொன் உலோகம் என்றும்
மங்காத, தூயது என்று பொருள்படும் தங்கமும் அடையாளப்படுத்துகின்றது.
ஆதிச்சநல்லூரில் உள்ள முதுமக்கள் தாழிகளில் இரும்பு கருவிகள,; உலோகப்பொருட்கள,; அவற்றின் வேலைப்பாடுகள,; ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆசியாவில் கி.மு.4000 ஆண்டுகளை சார்ந்த உலோகப்பொருட்கள் அதன் வேலைப்பாடுகள் கி.மு.2000–த்தில் ஆதிச்சநல்லூர் பொருணை நதி நாகரிகத்தில்; காணப்படுவது இருபகுதி மக்களுக்கும் நாகரிக வணிகத் தொடர்புகள் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது என்று குறிப்பிடுகின்றனர்.
இரும்பின் பயன்பாடு வேளாண் தொழிலுக்கு வாசலைத் திறந்தது. சிறு தோட்ட வேலைகளுக்கும் இரும்பு பயன்பட்டுள்ளதை (அகநானூறு – 394) நற்றிணை குறுந்தொகை (221) பாடல்கள் தெரிவிக்கின்றன.
மலை விவசாயம்
மக்கள் எளிய முறையில் மலையின் விவசாயத்தில் ஈடுபட்டனர். திணைஇ சாமைஇ மலை நெல் போன்றவைகள் பயிரிடப்பட்டது.
விளைச்சலுக்காக மழைவேண்டி மலைமேல் சென்று பலி கொடுத்து நீர் வளாவி வழிபாடு செய்தனர் (நற்றிணை 165)
முருகுவின் கோபத்தால் மழை பெய்யாமல் இருப்பதாக கருதி முருகுவை மகிழ்விக்க ஆண்கள் குரவைக் கூத்தாடினார்கள். இது தலைவனைப் புகழ்ந்தும் வீறு கொள்வதற்கும் பாடி ஆடும் ஆட்டம் ஆகும். (கலித்தொகை 39)
விளைச்சல் பெருக செந்தினையை நீரோடும் கலந்து தூவி வழிபாடு செய்தனர். விளைச்சல் இல்லாத காலங்களில் வேட்டை நாய்கள் கொண்டு காடுகளில் மான்களை வேட்டையாடினர். மலையில் உள்ள சாமிக்கு வேட்டையில் குறி தவறினால் சாந்தி பலி கொடுத்தார்கள் (நற்றிணை 165)
வேட்டையாடி வந்ததும் (குறவர்கள்) ஆண்கள் முற்றத்தில் அமர்ந்து பலாச்சுளையில் வடித்த கள்ளைக் குடித்து இறைச்சியைத் தீயிட்டு சுட்டுத் தின்றார்கள். (அகம் 172) வீட்டின்முன் பலாமரங்களை வளர்த்தார்கள். பலாக்கனிகளைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்ற வலைகட்டினார்கள் (குறுந்தொகை 342)
பலாக்கனியை கவர வந்த யானைகளை கணை, கிணப்பறை, கவண்கல், சீழ்க்கை ஒலி, தீப்பந்தம் கொண்டு ஊரே திரண்டு விரட்டியது.
மிகுதியான இறைச்சியை குறவர் வீட்டுப் பெண்கள் பாறைகளில் காயவைத்துச் சேமித்து வைத்தார்கள்.
ஆணும் பெண்ணும் தாங்கள் ஈடுபட்டத் துறையில் ஆற்றல் உள்ளவர்களாக விளங்கினார்கள். பொதுவில் உற்பத்தி செய்து பயன்படுத்தியவையெல்லாம் பொதுச் சொத்தாக இருந்தன. பண்டையப் புலவர்கள் நக்கீரன், மாமூலன், பரணன், கபிலன், அவ்வை போன்றவர்கள் பாடிய அப்பாடல்களில் பகிர்ந்துண்ணும் இனக்குழு பண்பாட்டில் வாழ்ந்த மலை, காட்டு நாட்டு குறுநில மன்னர்களைப் போற்றிப் பாடிவந்தனர்.
மலைவிவசாயமும், விலங்குகளுடனான பழக்க அனுபவமும் புதிய உற்பத்திக்கான தளத்திற்கு சமூகத்தை இ;ட்டுச் சென்றது. மனித நாகரிகம் கண்ட சகாப்தமாக இக்கால கட்டத்தை சமூகவியலார் கூறுவர். இக்காலக்கட்டத்தை புராதன பொதுவுடமைச் சமூகம் என எங்கல்ஸ் வர்ணிக்கின்றார்.
இச்சமூக சூழ்நிலைகளில் மக்கள் வாழ்ந்த இடங்கள் சிறுகுடி, பாடி, சேரி, என்றழைக்கப்பட்டனர்.
காத்தல், கொடை, வளமை, ஆக்கல், கோபம், அழித்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட அச்சமூக பெண்கள் வாழ்வு தாய் தெய்வங்களுக்கும் அப்பண்புகளை வழங்கியது.
குகையை உறைவிடமாக உருவான பிறகு பெண் அதனோடு இணைக்கப்பட்டாள். இல்லாள் எனக் கூறப்பட்டாள். குகையில் உறையும் தெய்வமாக காமாட்சி என்ற தாய்த்தெய்வம் கூறப்பட்டது.
தற்காலங்களில் கூட தமிழர்கள் வீடுகளில் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த விளக்கு வீட்டினுள் ஏற்றப்படுகின்றது. குகை உறை தெய்வம் மனை உறை தெய்வமாக வளர்ந்துள்ளதை அறிய முடிகின்றது.
மறு உற்பத்திக்கான உடல் சார் ஆற்றலுடன் மனிதச்சமூகத்தில் முன்னணி இடத்தில் பெண்கள் இயற்கை பண்புகளுடன் பெண்மை நிறைந்த தாய்த்தெய்வமாக விளங்கி வந்தாள். வேட்டைச்சமூக வாழ்க்கையில் பெண் இல்லாள் ஆக்கப்பட்டு பெண்மையோடு ஆணின் ஆற்றலும் தியாகமும் ஆண்மை என போற்றப்பட்டதும் பெண்ணின் தலைமையிலான சமூகத் தளத்தில் ஆணுக்கு இடம் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது. வள்ளி – முருகு இணைப்பு, வேலன் வெறியாட்டம், பச்சையம்மன் - ஆண் காவலர்களோடு அமர்வு. அங்காளம்மன் - பாவாடைராயன் தோற்றம். மாரியம்மன் - காத்தவராயன் கதை. போன்ற தொன்மக் கதைகளிலும் இச்சமூக வளர்ச்சியைக் காணலாம்.
மக்கள் மலை விவசாயத்தில் தினையோடு அவரையும் பயிரிட்டார்கள் (குநற்தொகை 82) ஐங்குறு நூறு (280) திணை, ஐவனநெல் போன்றவைகள் கதிர்கள் விடுகிறபோது பகலில் மேய வந்த கிளி மற்றும் குருவிகளைப் பெண்கள,; பரணில் ஏறி தட்டையை அடித்து விரட்டினார்கள். (ஐங் 286) கதிர்களை மேய வந்த யானையை விரட்டுவதற்கு ஆண்கள் பரண் மீது புலித்தோலைக் கட்டினார்கள்.
விளைச்சலை மேயவந்த காட்டுப்பன்றி, யானை, முள்ளம்பன்றி முதலானவற்றை வேட்டையாடினர். வேங்கைப்பூ பூக்கத் தொடங்கியதை கண்டு திணை அறுவடை செய்து விட வேண்டும். பின்பனி பெய்யும் எனக் கருதினார்கள். திணை அறுவடையின் போது பறவைகளை விரட்டுவதற்கு தொண்டகப் பறை அடித்தார்கள் (குறு – 375) விளைந்த கதிர்களை அறுவடை செய்ய உரிய நேரத்தை அறிய இரவில் மின் மினி பூச்சியின் ஒளியால் வானத்தில் மேகத்தின் ஓட்டத்தை கவனித்தார்கள். (நற்றினை 44) ஆண்கள் திணை அறுத்து வர பெண்கள் அதைக் காயவைத்து வீட்டில் சேமித்தார்கள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி நிலவாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பெண்ணானவள் தனக்குரிய இயற்கைப் பண்புகளோடு பெண்மை அடையாளமாய் வளர்ந்தவள், சமூகத்தில் ஆணின் வல்லாண்மை அழுத்தத்தினால் இல்லத்தோடு பிணைக்கப்பட்டாள்.
முல்லை
காட்டில் திரிந்த விலங்குகளை வீட்டுக்குக் கொண்டு வந்து பழக்கி கொட்டிலில் இன விருத்தி செய்வதைக் கண்ட பண்டையச் சமூகம், கால்நடைகள் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடத் தொடங்கியது. காட்டெருமையை வேட்டையாட வேண்டியிருந்தது. ஆனால் வீட்டுப்பசு ஆண்டு தோறும் கன்று ஈந்தது; பாலும் கொடுத்தது.
சில கூட்டுக்குடும்பச் சமூகங்கள் கால்நடைவளர்ப்பைத் தங்களின் முக்கியத் தொழிலாகக் கொண்டன. கால்நடைகள் உணவாகவும் போக்குவரத்துச் சாதனமாகவும் துணி (தோல்) தரும் மூலப்பொருளாகவும் பயன்படத் தொடங்கியது. இதனால் வேட்டைத் தொழிலிருந்து சில குழுக்கள் கால்நடை வளர்ப்பதற்குப் பிரிந்தன. இதனை எங்கல்ஸ் சமுதாய ரீதியில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப்பிரிவினை என்றார். இந்த இனக் குழுக்களை கோவலர், அண்டர், ஆயர் (இடையர்) என பழந்தமிழ் இலக்கியங்கள் அடையாளமிடுகின்றன. வீட்டு முற்றங்களில் இவர்கள் எருமை, பசு, வெள்ளாடு போன்றவற்றை வளர்த்தார்கள். கால்நடைகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது மாடுகளின் கழுத்தில் மூங்கில் குழாய்களில் புளிச்சாதத்தை அடைத்துத் தொங்கவிட்டு சென்றார்கள் (அகம் 311 ); காடுகளில் தங்கிக் கல் அடுப்பில் உலைவைத்து சுனை நீரில் வரகரிசியை போட்டு சோறு வடித்துப் பாலோடு உண்டார்கள. (அகம் 393) சிலர் ஈசலை வரகரிசியோடு நெய் சேர்த்து உண்டார்கள். இடையர் கால்நடை மந்தையை சீழ்க்கையடித்து ஒழுங்குபடுத்தினார்கள். வண்டு துளைத்த மூங்கிலி;ல் காற்று புகுந்து வெளிவரும் ஒசையைக் கண்டவன் புல்லாங்குழலை ஊதி அதன் இசையில் கால்நடைகளை ஒழுங்குபடுத்தினான்.
கால்நடைகளுக்காக புல்வளர்ப்பதும் சிறு தானியங்கள் வளர்ப்பதும் செய்தனர். கால்நடைகள் செல்வ மதிப்பு பெற்றதால் பண்டமாற்றுப் பொருளாகவும் பரிசுப்பொருளாகவும் மாறின.
பூமியின் மேற்பரப்பில் இதுவரை பொது நுகர்வு என்ற நிலையிலிருந்து கால்நடைகளும் அதன் செல்வங்களும் ஒரு பிரிவினர்களுக்கு (வளர்ப்பவர்களுக்கு) சொந்தம் என்ற தனியுரிமை தோன்றியது. இது சமூகப் பண்பாட்டு தளத்தில் இருவிதப் போக்குகளை விளைவித்தது. இதனைப் பண்டையத் தமிழிலக்கியங்கள் பதிவு செய்துள்ளது. தண்ணுமை என்னும் பறையை முழங்கி எயினர்இ வேடர் என்ற வேட்டை சமூகத்தினர் பசுக்களையும் கால்நடைகளையும் கொள்ளையடித்தார்கள். (அகம் 63) கொள்ளையடித்த பசுவை வெட்டி வேப்பமரத்திலிருக்கும் சாமிக்கு (காடுகளில்) பசுவின் ரத்தத்தை தூவிய பின்னர் சுட்டோ, வேகவைத்தோ உண்பார்கள் (அகம் 309).
தங்களின் உடைமையாகிப்போன கால்நடைகளை எயினர்களிடமிருந்தும், வேடர்களிடமிருந்தும் மேய்ச்சலின் போது வழி தவறாமல் காப்பவனாக கருப்பசாமி (எதிரிக்கு அச்சமூட்டுபவன்) என்றனர். இருண்ட கானகத்திற்கு உரியவன் என்ற பொருளிலும், கரிய நிறமுடையவன் என்ற பொருளிலும் மாயோன் என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது.
வேட்டைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் காடுகள் கானமர் செல்வி என்ற தாய் தெய்வம் இருந்த நிலையில் ஆணின் ஆற்றல் வேட்டைத்தொழிலில் முன்னணி வகிக்கத் தொடங்கியபோது முருகு நுகர்வுக்குரியவனாகி காடுகளின் மகனாகக் கூறப்பட்டான். இதில் தாய்வழி மரபுரிமையும் தாய்வழி சொத்துரிமையும் குறிப்பிடப்படுகின்றது.
பொது நுகர்வு என்ற சமூக நிலையிலிருந்து தனியுடைமை தோன்றிய சமூகத்தில் “மாயோன்”; என்ற ஆண் தெய்வம் “காடுறை உலகம்” என்ற சொத்துரிமைக்கு எப்படி குறிக்கப்படுகிறது என்பதை நாம் ஆய்வு செய்யலாம்.
காட்டுமிராண்டியாய் அலைந்து திரிந்து உணவு தின்று வாழ்ந்த காலத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபட்ட சமூகம் குடும்பமாக வாழக் கற்றுக்கொண்டபோது இரத்த உறவு அடிப்படையில் ஒன்றிணைந்து பின்னர் இரத்தக் கலப்பு குழுவாக (பெற்றோர் – சகோதரர் உறவு தடைக்குப்பின் ) மாறியது.
குழு மணத்தில் மேன் மேலும் சில நூறு வகைப்பட்ட உறவு மணத்தடைகளாக அதிகரித்தால் இணை மணமுறை எனும் முறை சமூகத்தில் உருவாகியது. இதில் பெண்ணானவள் தான் விரும்பியவனையே தன் தலைவனாகக் கொண்டாள்.
இதற்கு அன்புடைய நெஞ்சங்கள் கலந்த காதல் உணர்வு அடிப்படையாக இருந்தது. (வள்ளி – முருகு)
இதனால் குழுக்களின் நீண்ட காலத்திற்கோ, குறுகிய காலத்திற்கோ ஆணுக்கும் பெண்ணுக்கும் இணை வாழ்க்கையிருந்தது.
சமூகத்தில் ஏற்பட்ட கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈட்டிய செல்வம் ஆணின் உடைமையாகின்றது. கால்நடைகளை ஆண் பழக்கி மந்தையாக மேய்த்தான்; பண்டமாற்று செய்தான் அதனால் பெற்ற பயனும் அவனுக்கு உடைமையானது.
கால்நடை தொழிலில் பெண்ணின் பணி இருந்தாலும் அவை உயிர்வாழ்வதற்கு வேண்டிய உழைப்பில் ஆணின் பணியோடு ஒப்பிடுகிற போது பெண் முக்கியத்துவத்தை இழந்தாள். இதுவரை காட்டிற்கு உரியவனான காடுகள் பதில் “மாயோன் மேய காடுறை உலகு” என ஆண் தெய்வத்திற்கு உரியதாக முல்லைத் திணை வாழ்க்கை தெரிவிக்கின்றது.
உடைமையாளானாக மாறிய ஆண்; தன் குழந்தைகளுக்குச் சாதகமான வழியில் பரம்பரை வாரிசு முறையை மாற்ற இந்த வலுப்பெற்ற நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தூண்டுதல் பெற்றான். இதனால் பெண் வழியாக மரபு வழியைத் தீர்மானித்தல், தாய் வழியாக வாரிசுரிமைத் தீர்மானித்தல் ஆகிய இரண்டும் தூக்கியெறியப்பட்டு ஆண் வழி மரபு முறையும,; தமிழ்ச் சமூகத்தில் உருவாகிறது. பெண்ணின் மனித மறு உற்பத்தி ஆற்றல் உடல்சார் ஆற்றலாக கருதாமல் தாய்மை என மனம்சார்ந்த கருத்தாக அவளுக்கு வழங்கியது.
பெண்மை பண்பில் அவள் நடவடிக்கைளை அவளே தீர்மானிப்பவளாக இருந்த நிலைமாறி தாய்மை பண்பில் அவள் மற்றவர்களின் வாழ்விற்காக பிறந்தவளாக திசை திருப்;பப்பட்டு அவளது இறப்பு வரை அப்பண்பில் பூட்டப்பட்டாள். தாய்மை இல்லாத பெண்மையை ஆண் பண்பாடு ஏற்க மறுத்தது. தன் உடைமையாகி கற்புநலம் பூண்டு, பிள்ளைபெறுத்தல், பிள்ளைகளைக் காத்தல், பிள்ளைநலம் ஒம்பல் ஆகிய பண்புக்குரியவளாக தாய்மைப் பண்புகளுடன் புதியதாய் உருவாக்கப்பட்டாள்.
கன்னி நிலையில் தான் விரும்பிய ஆண் உடலுக்கு தன்னியல்பான பாலியல் இன்பத்தை பெற்ற நிலையையும் பின்பு அவனுடன் மண உறவு கொண்டு இல்லறம் ஏற்ற நிலையையும் பழந்தமிழப் பாடல்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன. இது தவிர அறிவுத் தேடல் பொருள் தேடலிலும் சுதந்திரமாக ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலை மாறி தந்தை – கணவன் என்கின்ற ஆணின் ஆதிக்கதிற்கு குடும்பத்தின் மாண்பினை கட்டிக்காப்பவளாய் பெண் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறாள். வீடு, குடும்பம,; சமூகம் என முக்களங்களில் அவள் தாய்மை என்ற இறையாண்மையில் கன்னி, சுமங்கலி, தாய் என ஆணாதிக்க சமூக வல்லாண்மையில் அடக்கப்பட்டாள். பெண்ணுடைய பாலியல் உறுதியை கற்பு என்று கூறப்பட்டது. முல்லைப்பூ போன்ற கற்பு என்று தமிழிலக்கியம் இதனைப் பதிவு செய்துள்ளது.
தமிழ் சமூக கருத்துருவாக்கத்தில் பெண் உடல் என்பது அகமாக அதாவது நிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. காதல், காமம், குடும்பம் என் வாழ்நிலைகளையும் பெண் உடல் வலிமை, பொறுமை என்ற பண்புகளோடு நுகர்வு தன்மையற்றதாக தீட்டப்பட்டது. ஆனால் ஆண் உடல் (காலமாக) வரலாறாக உருவாக்கப்பட்டுள்ளது. வீரப்போர் மூலமாக காலத்தின் ஊடாக வரலாற்றை படைப்பவனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆண் வெல்ல வேண்டிய பரப்பாக நிலமும் பெண்ணும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
தாய்மைப்பண்பை பெண்ணின் மீது சுமத்திய ஆணாதிக்க சமூகம் இதுவரை பெண்மை தன்மையுடன் இருந்த தாய்த்தெய்வங்களுக்கு தாய்மைப் பண்பை ஏற்றி அவளுக்கு அம்மன் என்று பெயர் சூட்டியது. (உதாரணமாக மாரியம்மன்) இந்தத் தெய்வத்தை சமூகம் தன் மத்தியில் அங்கீகரித்தது. பெண்ணிடமுள்ள போர்க்குணம் ஆணுக்கு எதிரானதால் போர்க்குணம் கொண்ட பெண் தெய்வங்கள் எல்லைப் புறத் தெய்வமாக மாற்றியது. (கொற்றவை) பெண்மைப் பண்புகளோடு விளங்கும் பெண் தெய்வங்கள் கடுஞ்சினம் கொண்டு தீயவை உண்டாக்கும் என்றும் தாய்மை பண்புள்ள தெய்வங்கள் கருணையான தெய்வங்கள் என்றும் உள்ள வழிபாட்டுநெறி சமூகத்தைப் பிரதிபலிக்கின்றது. இந்தப்போக்கு தமிழச் சமூகம் மட்டுமல்ல உலகச்சமூகம் முழுவதும் ஆணின் உறுதிப்பட்டியலில் பூமி புதிய“தாய்” மாறியது.
கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள்
1. மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன்
2. இந்திய கற்கால - பி.டி.சீனுவாச அய்யங்கார்
3. குடும்பம,; தன்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம் - எங்கல்ஸ்
4. சங்ககாலச் சமுதாயம் - பேராசிரியர் க.சுப்பிரமணியன்
5. மனித சமூகச்சாரம் - ஜார்ஜ. தாம்ஸன்
6. தமிழ்ச்சிந்தனை மரபு - ச.பிலவேந்திரன்
7. பண்பாட்டு வேர்களைத் தேடி -(தொகுப்பாசிரியர்) ஞா.ஸ்டீபன்.
ஆ.இரவிகார்த்திகேயன்
விழுப்புரம்
கைபேசி: 09443736444