Monday 2 May, 2011

ஆ.இரவிகார்த்திகேயன் நூல்கள் ஆய்வுக் கூட்டம்


ஆ.இரவிகார்த்திகேயன்   நூல்கள் ஆய்வுக் கூட்டம்



மே நாளில் (01-05-2011) விழுப்புரம் எழுத்தாளர் கவிஞர் ஆ.இரவிகார்த்திகேயன் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. நூறுபூக்கள் கலை இலக்கிய அறக்கட்டளை நிகழ்த்திய இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை புரவலர் கவிஞர் த.பழமலய் தலைமையேற்றார். இலக்கிய ஆர்வலர் வெ.சங்கரநாராயணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.







தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதனை அறிவியல்பூர்வமாக சமூச்சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் வானியல் அறிவை துணையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூலே ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்னும் நூலகும். பகல் பொழுது அதிகமாக உள்ள காலம் தொடங்கும் தை மாதமே தமிழ் ஆண்டு பிறப்பு என்பதை எளிய தமிழில் சான்றுகளோடு இந்நூல் விவரிக்கின்றது. இந்நூலை மேனாள் மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் ஆய்ந்து விளக்கவுரை நவின்றார்.



கடவுள் இல்லை என்ற பகுத்தறிவாளர்களின் கருத்தை சமூகச் சார்போடு கடவுள்களைப் பொருத்தி பார்க்கும் பகுத்தறிவு கவிதை நூலே தெய்வம் துணைகொள் என்னும் நூலாகும். இந்நூலை நெய்வேலி எழுத்தாளர் கு.மு.சவகர் அவர்கள் உணர்வு பெருக்கோடு இனிய தமிழில் ஆய்ந்துரை நிகழ்த்தினார்



பெண் தலைமையிலான பண்டைய சமூகச்சூழல் மாறி ஆணாதிக்க சமூகச் சூழல் வளர்ந்து நிலைபெற்ற சமூக மாற்றத்தினை கால நிரல்படி அறிவியல்பூர்வமாக சான்றுகளோடு எழுதப்பெற்ற புதிய தாய் என்னும் அரிய ஆய்வு நூலை தமிழ்த்தேசிய சிந்தனையாளர் திரைப்பட இயக்குநர்  வீ.சேகர் அவர்கள் இனிய எளிய உரைநடையில் யதார்த்த நிலையோடு பொருத்தி ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்வில் தமிழர்களின் பண்பாட்டு கூறுகளை நினைவுகூறும் வகையில் கேழ்வரகு புட்டு, குழிபண்ணியாரம் ஆகிய உணவுவகைகள் வந்திருந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் நூறுபூக்கள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் பாவலர் ஏ.செயச்சந்திரன் பாவலர் விநாயகமூர்த்தி, இலக்கிய ஆர்வலர் வ.பன்னீர் செல்வம், தெ.க.எழிலரசன் ஆகியோரும் பங்கேற்றனர்.



பேராசிரியர் பா.கல்யாணி,பாவேந்தர் பேரவையின் செயலர் உலக.துரை, மருதம் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சிவ.சிவக்குமார், இரா.குபேரன், எழில்.இளங்கோ, அ.பன்னீர்செல்வம், மற்றும் இலக்கியஆர்வலர்கள் அரு.முத்தமிழடியான், விழுப்பரையனார், கவிஞர் சக்தி, கவிஞர் பரிக்கல் சந்திரன்,  புகைப்படக் கலைஞர் முரளி, அக்பர்செரீப், அ.வீரமணி, இரா.சக்கரை, வழக்கறிஞர் லூசியா, கிங்ஸ் பிரபு, உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தமிழ்ச்சுவை மாந்தி மகிழ்ந்தனர்.


இலக்கிய ஆர்வத்துடன் க.இர.இயங்கியக ஊழியர்கள் ஜி.பன்னீர்செல்வம், ஜி.இரமேஷ், சரண்ராஜ், கோபி, தாஸ், தீனதயாளன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனர்.