ஆ.இரவிகார்த்திகேயன் கவிதைகள்

விழுப்புரம் மாவட்டம்

எங்கள் மண்ணின்
இருப்பையும் இழப்பையும்
திருவக்கரை கல்மரங்கள்
காலம் சுட்டும்.

ஆதி மனிதர்களின் தடயங்களை
கீழ்வாலை குகைகளின்
தொல்லோவியங்கள்
சுடரிட்டுக் காட்டும்.

உடையாநத்தம் தாய்த் தெய்வத்தின் 
மடியில் விளையாட 
இடிச்சி மலையின் ஆடுகள்
வழியைத் தேடும்.

எருமையின் தலையில் 
கொற்றவை நின்றதால்
பாய்கலைப் பாவையைவிட்டு
மான் ஓடும்.

மலையமான் தந்த பரிசுகளை
மண்ணுக்குள் ஒளித்த
பெண்ணையாற்றின் ஊற்றுக்குள்
கைவிட்டு குழந்தைகள்  தேடுவர்.

அவ்வையார் தந்த மொழியை
அதியமான்
சண்டையில் கல்வெட்டாய் பொறிப்பார்.

நல்லியக்கோடனைச்
சிறுபாணாற்றுப் படைச்
செய்யுளில் பாடி
வங்கக்கடல்
மரக்காணத்தில் உப்பாய்   வியர்க்கும் 

குன்றின்மேல் ஏறிய கபிலர்
திரும்பவில்லை என 
தென்பெண்ணை கல்லில் மோதி விசும்பும் 

அணியா அழகர்   
அருகன் வழியில்
செஞ்சி குன்றுகள்
சமணம் பேசும்.

பட்டிகள் போதாது
கோட்டைகள் கேட்டு
மேய்ச்சலில் திரும்பிய ஆவினங்கள்
ஆனந்த கோநானின் ஆற்றல் கூடும்.

சடையப்ப வள்ளலை
துணையாய் இருக்க
வெண்ணெய்நல்லூர் காளியிடம்
கம்பன் கவிபாடுவார்.

சோழனைச் சிறைவைத்த
கோப்பெரும்   சிங்கனை
தேடியபோது
திருவதிகைக் கோவிலில் 
சிலையாய் த்   தொழுதான்.
சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட்கொண்டு
சிவாலயம் தமிழ்பாடும்.

மெய்க்கண்ட   நாயனாரின்
சிவஞான போதம்  பயில
மடாதிபதிகள் மண்டியிடுவர்.


மண்டகப்பட்டு தளவானூரில்
பனைமலைக் கோவிலில்
 சித்திரை நிறைமதியில்
அரவாணிகளோடு
ஆட்டம் போடும் அரவான்,
தேர் ஏறி 
திருகோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
கோபுரத்தின் உயரத்தைக்   காட்டுவார்.

மேலச்சேரி பசையம்மனிடம்
எழுமுனிகள் படையல் கேட்கும்.

தேசிங்கு ராசனின்
குதிரைச் சத்தம்
சிங்கவரம் ரங்கநாதருக்கு
தூக்கத்தைக் கெடுக்கும்.

நர்சிங்கம்பேட்டை
பட்டாபிராமர் கோவில்
பாழகிவிட்டதென்று
செஞ்சியை விட்டு
வெங்கட்ரமணர் வெளியேறினார்.

தியகதுருகம்     மலையம்மன்
பீரங்கியைப் பார்த்து
கதவை மூடிக் கொண்டாள்.

இரட்டைப் புலவர் பாடலுக்கு
எண்ணாயிரம் கவிக்காமேகம்
காஞ்சியில் போட்டி நடத்துவார்.
விளைச்சலில் கணக்குக் கேட்டு
திருவாமாத்தூர் முத்தாம்பிகை
வட்டப்பாறையில் நாகத்துடன்
சத்தியம் கேட்பாள்.

வண்ணச் சரபம்  தண்டபாணி சுவாமிகளிடம்
ஏடுகள் கேட்டு
பக்திமொழிகள்
தவமிருக்கும்.

துருப்பிடித்த அரிவாளைத்
தூக்கி   எறிந்துவிட்டு
காகுப்பம் அய்யனார் 
காவல்துறையிடம் துப்பாக்கி கேட்பார். 

நீர்நிலைகளில் காணாமல் போன 
கன்னிமார்களை சுய உதவிக் குழுக்கள்
அழைத்துச் சென்றார்களா என
குல தெய்வம் கும்பிட வந்தவர்கள்
குறிகேட்பர்.

ஆரோவில் வந்த அயலார்
பாரதம் படித்து
பண்பாடு அறிவர்.

பறையும் பம்பையும் உடுக்கையும்
தெருக்கூத்துடன்
மண்ணில் இசை விளைக்கும்.