Wednesday 9 March, 2011

கவிஞர் த.பழமலய் கவிதை

எழுதப்படாத சிலப்பதிகாரங்களுள் இங்கொன்று!

 கவிஞர் த.பழமலய்




இந்த ஊரில்  அன்று விளைந்த நெல்லை
இவ்வளவு என்று சொல்ல முடியாது
விதைகால் நெல்தான்.

இடைச்சி ஒருத்தி இருந்தாள்.
பாலையும் பாலால் ஆனவற்றையும்
பண்டமாற்ரு முறையில் விற்றாள்.
பணமும் காசும் பெருகியதால்
பலவகை அணிகலன்கள் வாங்கினாள்.

கலன்களுள் ஒன்று குறைவதைப் பற்றி
கட்டிய கணவன் அய்யப்பட்டான்.
“ எங்கே? யார்?என்று
எடுத்த கொடுவாளுடன் துரத்தினான்.
பாறை இடுக்கில், குகையில் போய்ப்
பதுங்கினாள்.
இறந்துவிடத் துணிந்து
இலைகளை வைத்து நசுக்கியவள் முன்னே
எதிர்ப்பட்டு நின்றான்.

“ நானும் பத்தினி.
என் தாயும் பத்தினின்னா-
இந்த பாறையோட நான் மேலே போவணும்!

வளர்ந்த பாறையின் மேலேயும் ஏறி
வந்தவனைப் பார்த்தாள்.
குதித்த காலடிச் சுவடுகள்
பாறையில் பதிந்தன!

“ நானும் பத்தினி,
என் தாயும் பத்தினின்னா-
இந்த குகைவாய் மூடிக்கிணும்!

கொலைவாளோடு குதித்தவனைக் கண்டதும்
குகையின்வாய் மூடித்தான் கொண்டது.!

அதட்டினான்;அழைத்தான்,
தோன்றினாள்:
மகிடன் செற்ற மாயோளாய்!

அவன் தான் எருமை.
அவள்தான் மாயோள்.
பத்தினி பலியாக மாட்டாள்.
பலி கொள்வாள்.
...........
பின் குறிப்பு:
ஆயந்தூர் கூடலூரை அடுத்து
ஆர்க்காடு.
கொல்லைவெளியில் நடந்து போய்
இடைச்சிக்கல் முன் நின்று
ஏறிட்டுப் பார்க்கலாம்.
மாதரி தெரிவாள்.
அய்யை தெரிவாள்.

தலையில் கூடையைப் போல்
தனிக்கல் ஒன்று இருக்கிறது.
அதன் நிழலில் இருந்து-
எழுதப்படாத  சிலப்பதிகாரங்களுள் ஒன்றைக்
கிளிகள் தங்களுக்குள் பேசுகின்றன.
தேனீக்கள் கூடாகக் கட்டுகின்றன.

அழிக்க முடியாதது அது-
எந்த ஆணாலும்!.

No comments:

Post a Comment